தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் மாதத்தில் இருந்து மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். அதன் முதல்கட்டமாக வரும் 5, 6 ம் தேதிகளில் கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு பணிகளை தொடங்கி வைக்கிறார்,இதற்காக முதல்வர் ஸ்டாலின் 5ம் தேதி கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அன்று காலை முதல்வர் ஸ்டாலின், செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் கோவையில் டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து கோவை பிவிஜி மஹாலில் கோவை திமுக நிர்வாகிகள், செயல்வீரர்களை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.
6ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசின் திட்டப்பணிகள், புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள், குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த கள ஆய்வு
மூலம் அரசின் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுரை வழங்குகிறார்.
முதல்வரின் இந்த 2 நாள் நிகழ்ச்சிகளிலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொள்கிறார். அத்துடன் முதல்வரின் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவை வந்தார். அவர் முதல்வர் விழா நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளும் வழங்கினார். இந்த ஆய்வு நிகழ்ச்சியில் அன்பகம் கலையும் கலந்து கொண்டார்.