எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை மிரட்டும் வகையில் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி வருகிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆறுகளில் மணல் அள்ளியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் திருச்சி,கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்களில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ திருச்சி,கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். ஐகோர்ட்டின் இடைக்கால தடையையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.