Skip to content

ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் துணிகர சம்பவம்…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (55). இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வெளியூருக்கு சென்றிருந்த ஸ்ரீதரின் மனைவி முத்துச்செல்வி(50) வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

அதே பகுதியில் உள்ள ராயர் தோப்பு பகுதியில் குடியிருப்பவர் செல்வகுமார் (58). வேளாண்மைத்துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கும்பகோணம் கோவிலுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை திருடிக் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு அடுத்தடுத்து வந்த அமிர்தா நகரை சேர்ந்த கார்த்திகைவேல் (36), ஆனந்த் (40) ஆகிய இருவரும் தாங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர் என தனித்தனியாக புகார் அளித்தனர். காவல் நிலையத்திற்கு அடுத்தடுத்து வந்த திருட்டு புகாரினால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இந்த கொள்ளை சம்பவம், திருட்டு முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டம்மிட்ட மர்ம நபர்கள் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.

கொள்ளை சம்பவங்கள் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!