அரியலூர் மாவட்டத்தில் 03.03.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஒரே தவணையாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட சுமார் 58477 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இம்முகாம்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவு கூடங்களில் வழங்கப்பட உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நகர்புறங்களில் 46 மையங்களும் ஊரகப்பகுதிகளில் 496 மையங்களும் என மொத்தம் 542 மையங்கள் செயல்பட உள்ளன. ஆறு நடமாடும் மருத்துவக்குழு மூலமாகவும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும், மேலும்
அண்டை மற்றும் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சிமென்ட் தொழிற்சாலைகள் பணிநிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறையின் பணியாளர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள், பிற துறை பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 2340 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர்
இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் பெறப்பட்டு குளிர்சாதன வசதிகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பனது என உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுது.
எனவே அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான 03.03.2024 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.