Skip to content
Home » தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் உள்ளது போல தமிழகத்தில் குடிசை, பஜார் பகுதிகளில் நான்கு பணியிடங்களுடன் கூடிய 708 மருத்துவமனைகள் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சென்னையில் இருந்து முதல்வர் திறந்து வைப்பார்.

கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதா? என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிந்த பிறகே அதுகுறித்து கூற முடியும். அது ஒருபுறம் இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பை வெகுவாக தடுக்க முடியும்.

தினமும் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சியில் ஈடுபட வேண்டும். ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்கள், நண்பர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது.

நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உருமாற்றம் சீனாவில் தொடங்கி ஜப்பான் உள்பட 6 நாடுகளில் பரவி உள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவமால் தடுக்க முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் மற்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து தான் உள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது.

தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. முக கவசம் அணிவது நல்லது. எம்.ஆர்.பி. செவிலியர்கள் 4308 பேர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

அவர்களுக்கான பணி நியமன ஆணையை விரைவில் முதல்வர் வழங்குவார். எம்.ஆர்.பி. மூலம் செவிலியர்கள் எடுக்கும் போது ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *