அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என ஆக மொத்தம் 15,000 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் செந்துறை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் செந்துறை சாலை துவங்கி ஜெயங்கொண்டம் சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரக்கூடிய அத்தி, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், ஆலம் ஆகிய மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது. இதைதொடர்ந்து, மரக்கன்றுகளை முறையாக பராமரித்திடவும், இதேபோல் அரியலூர் முதல் செந்துறை வரை உள்ள சாலையில் பணிகள் முடிந்தவுடன் சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் முரளிதரன், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.