அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ இடத்தில் பார்த்த போது சொகுசு காரின் இஞ்சின் தனியாக கழண்டு விழுந்திருந்த நிலையில் கார் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது.
காருக்குள் இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தபோது காரில் இருந்த ஏர்பேக் சிஸ்டம் செயல்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே யாரும் இல்லாததால் குழப்பமடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவித்து காயம் அடைந்தவர்கள் யாராவது சிகிச்சைக்காக சேர்ந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற காரை பரிசோதனை செய்தபோது காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை உடனடியாக மீட்ட போலீசார் கார் யாருடையது? விபத்து நடைபெற்ற உடன் தப்பிச்சென்ற ஓட்டுநர் யார்? விபத்து நடந்ததால் பதற்றத்தில் காரில் இருந்த பொருட்களை காரிலேயே விட்டுச் சென்ற மர்ம நபர்கள் யார் என்கிற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சொகுசு காரில் இருந்து மீட்கப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 500 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.