அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மழைப்பொழிவின் காரணமாக அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் உள்ள கரைவெட்டி பெரிய ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் கலுங்குஓடையில் வழிந்து வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைவெட்டி ஏரியிலிருந்து கரைவெட்டி, பரதூர், மேலக்காவட்டாங்குறிச்சி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெங்கனூர், முடிகொண்டான் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் கலுங்கு ஓடை செல்கிறது.
இந்த ஓடை பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகியுள்ளதால் ஓடையில் செல்லும் வெள்ளம் அருகில் உள்ள சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டு வயல்களின் வழியாக பாய்ந்து ஓடுகிறது. இந்த கிராமங்களில் சம்பா நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்களில் தண்ணீர் மூன்றடி உயரத்திற்கு தேங்கியுள்ளது.
ஒரு வாரமாக நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நெல் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளனர். மூன்று போகம் சாகுபடி செய்த இந்த பகுதியில் தற்பொழுது சம்பா பயிர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பயிரும் தற்பொழுது கனமழையின் காரணமாக ஓடை தூர்வாரப்படாத நிலையில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது
இதனால் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக விவசாயிகள் இழந்துள்ளனர். கலுங்கு ஓடையின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வாருவதன் மூலமாகவே தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே உடனடியாக தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதற்கும் ஓடையின் ஆக்கிரமைப்பை அகற்றி தூர்வார தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.