தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் தனியார் மருந்து கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பிரிவில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து மளமளவென தீப்பற்றி கம்பெனி முழுவதும் பரவ தொடங்கியது. கம்பெனி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு தீ எரிய தொடங்கியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.
இருப்பினும் ஒரு பிரிவில் சுமார் 60 ஊழியர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதனால் அனைவரும் கதறி அழுதபடி கூச்சலிட்டனர். கட்டிடத்தின் மேல் பகுதிக்கு தொழிலாளர்கள் ஓடிவந்து அங்கிருந்தபடி தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். ஒரு சிலர் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனான சாய்சரண் என்பவர் உடனடியாக மாடியில் ஏறிச்சென்று ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி உள்ளே தீயில் சிக்கிய 50 பேரை பல்வேறு சிரமத்திற்கு இடையில் பாதுகாப்பாக வெளியேற உதவினான். அதற்குள் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து ஏணி மூலம் தொழிலாளர்களை மீட்டனர்.