மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்காரதோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. \
கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு சிங்காரத்தோப்புத் தெருவைச் சேர்ந்த குமார், சின்னையன், வடிவேல், ஹரிசுதன், பாண்டியன், ரங்கசாமி, ஜெயகுமார், சுரேஷ் ஆகிய 8 பேர் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனை தாக்கியதுடன், ரூ.35,000 மதிப்புடைய அவரது வீட்டு காம்பவுண்டு சுவரையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை மயிலாடுதுறை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகினார். நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி 8 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரு.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். விசாரணைக்கு ஆஜராகாத சின்னையன், வடிவேலு இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். எஞ்சிய 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.