கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.
மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அவர் இளம் பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோக்கும் மாணவன் ஆஸ்டின் ஜியோவுக்கம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகார் அளித்தார்.
பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார்.
இதனிடையே கடந்த 11ம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாட்ட போலீஸ் சூப்புரெண்டை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “நான் பெனடிக்ட் ஆன்டோ மதபோதகராகப் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாகப் பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னைத் தொட்டுப் பேசத் தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி என்னிடம் பேசினார்.
ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இது தொடர்பாக மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகார் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் நேற்று மாலை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட போலீஸ் சூபிரெண்டு பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.
சிறையில் உள்ள ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா இது குறித்து கூறியதாவது:- “பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதுடன் அந்தப் பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். எனது மகனுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு வாங்கச் சென்றபோது பாதிரியாருடன் அறிமுகம் ஏற்பட்டது. பிறகு அந்த மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி, அந்த மாணவியை அறை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அந்தப் பெண் பாதிரியார் குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாததால் என் மகனிடம் ‘தன்னை காப்பாற்றுமாறு’ உதவி கேட்டுள்ளார். பாதிரியார் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார். கல்லூரி மாணவிக்கு அளித்த பாலியல் தொந்தரவு குறித்த எனது மகன் பாதிரியாரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து கொள்ளலாம் என வழக்கறிஞர் மூலம் எனது மகனை அந்தப் பாதிரியார் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
என் மகன் அங்கு செல்வதற்கு முன் வீட்டில் இருந்த பொருட்களை அவரே உடைத்துவிட்டு பாதிரியார் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை என் மகன் சித்தரித்து அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக என் மகன் மீது பாதிரியார் பொய் புகார் அளித்ததால் போலீசார் என் மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாதிரியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் நாடகமாடி வீட்டிலுள்ள பொருட்களை உடைத்ததாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது என் மகன் பாதிரியார் லேப்டாப்பை எடுத்து வந்து விட்டான். அந்த லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. எனவே, நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று காவல் துறையிடம் வேண்டிக் கொள்கிறேன். பாதிரியார் போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக்ட் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே பாதிரியார் தற்போது குமரி மாவட்டத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். அவர் வெளிமாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பாதிரியார் பணிபுரிந்த ஆலயத்திற்கு தற்போது வேறு ஒரு பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.