தஞ்சாவூர் மாவட்டம் தொண்டாம்தோப்பு மேலதெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (33). இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பைக்கில் அழைத்துச் சென்றனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் மீண்டும் ஊருக்கு பைக்கில் திரும்பினர். அப்போது பூண்டி அருகே இவர்களின் பைக்கை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அந்த 3 பேரும் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி சரவணன் மனைவி உஷா அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி மற்றும் அரை பவுன் தோடு ஆகியவற்றை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து உஷா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பாபநாசம் டிஎஸ்பி முருகவேல் உத்தரவின்படி அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில்
சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், மதன் குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் தென்காசி மாவட்டம் தல்லாங்குளம் பகுதியை சேர்ந்த மார்ட்டின் மகன் அருள் குமார் (23), திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ்குமார் (35). அதே பகுதியை சேர்ந்த சாலமன் மகன் மகேந்திரன் (24) ஆகிய 3 பேரும் உஷாவிடம் நகைகளை வழிப்பறி செய்தது தெரிய வந்தது.
இதில் அருள்குமார் மற்றும் சுரேஷ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு சம்பத்திற்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.