கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக அபான் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாட்டி, சித்தி, சித்தப்பா, தம்பி, காதலி என 5 பேரை அபான் சுத்தியலால் அடித்துக்கொலை செய்துள்ளார். விஷம் குடித்த அபானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அபானின் தாயார் ஷெமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேருமலை பகுதியை சேர்ந்தவர் ரஹிம். இவரது மனைவி ஷெமி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபான் (23), இளைய மகன் அப்சான் (13). ரஹிம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிற்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். கொரனா காலத்தில் கேரளா திரும்பிய அபான் பின்னர் அங்கு செல்லவில்லை.
இங்கு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தான். அத்துடன் காதலிக்கு ஒரு வீடும் வாங்கி கொடுத்து உள்ளான். இதனால் அவன் கடன் பிரச்னையில் இருந்து வந்தான். உறவினர்கள் யாரும் அவனது கடனை அடைக்க உதவ வில்லை. இதனால் அபான் உறவினர்கள் மீது கோபத்தில் இருந்து உள்ளான்.
5 பேரை கொலை செய்ய இது தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என போலீசார் விசாரிக்கிறார்கள்.