குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி வல்சாத் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . வாபி, வல்சாத், சூரத் மற்றும் உத்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏறக்குறைய 2 ஆயிரம் சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநில ரெயில் நிலையங்களில் பலரை கொலை செய்தும், பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தும் சென்றுள்ளது தெரிய வந்தது.
அவரது பெயர் ராகுல் என்ற போலு கரம்வீர் ஈஸ்வர் ஜாட் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மாற்றுத்திறனாளியான அவர், அதனை பயன்படுத்தி ரெயில்களில் அடிக்கடி பயணித்து வந்துள்ளார்.
அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் பனா சியாம் கிராமத்தில் வசித்து வரும் ராகுல், கடந்த காலங்களில் ராஜஸ்தான், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் லாரி திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2018, 2024 ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 14-ந்தேதி குஜராத்தின் மோதிவாடா கிராமத்திற்கு கல்லூரி மாணவி (வயது 19) ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்றார். மாணவியின் தோழி சென்றவுடன் அந்த மாணவி மட்டும் தனியாக வந்தார்.
அவரை பின்தொடர்ந்து வந்த ராகுல் என்ற மாற்றுத்திறனாளி திடீரென வழி மறித்து மாணவியை அருகில் உள்ள மாந்தோப்புக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
மாற்றுத்திறனாளி என்பதை பயன்படுத்தி பல ரயில்களில் அவர் பயணம் செய்த ராகுல், கடந்த 19ஆம் தேதி 60 வயது முதியவரை கொலை செய்து, அவரிடம் இருந்த பணம் பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.
அதேபோல், கடந்த அக்டோபர் மாதம் புனே ரயிலில் பயணம் செய்த போது ஒரு பெண்ணை கொலை செய்து, அவரிடம் இருந்த பணம் நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி பெங்களூர் ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டியில் பயணம் செய்த ராகுல், சக பயணி ஒருவரை கொலை செய்துவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி தப்பி உள்ளார். கைது நடவடிக்கைக்கு முந்தின நாள் கூட, தெலுங்கானாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவரை கொலை செய்து, அவரிடமிருந்த பணம் நகைகளை திருடி உள்ளார்.