சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் சுப்ரீம் கோர்ட்டு இடையே வார்த்தை போர் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைக்கு மத்திய அரசு கடந்த 4-ந்தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த விசயத்தில் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி ரிஜிஜூ, நாட்டில் தலைவர்கள் என்பவர் இந்த நாட்டின் மக்களே ஆவர்.
நாம் அனைவரும் சேவகர்கள். தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது பொதுமக்களே. நாட்டில் வழிகாட்டி என ஒன்று இருக்கிறது என்றால், அரசியல் சாசனமே நமது வழிகாட்டியாகும். நாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எப்படி விரும்புகிறார்களோ? அதன்படி நடக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. நாட்டில் யாரும், யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது என கூறினார்.
இந்த சிறந்த தேசத்திற்கு, பணியாளர்களாக சேவை செய்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என நாம் நம்மை சீர்தூக்கி பார்த்தோம் என்றால், அதுவே நல்லது என ரிஜிஜூ கூறினார். இந்நிலையில், ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்கள் பதவியேற்றதும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் இன்று நடைபெறுகிறது.