தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை எழுந்துள்ளது. தமிழகத்தில் குறுவை பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடமும் முறையிட்டது. இன்று மாலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பிக்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார்கள்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசரக்கூட்டம் நடந்தது. ஆணைய தலைவர் ஹல்தர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உடனடியாக 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.அதற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் கர்நாடகம் தெரிவித்தது. இதைக்கேட்ட ஆணையத்தின் தலைவர் ஹல்தர், காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டார்.