தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சி சென்றுவிட்டது.இதன் காரணமாக தமிழக்த்தில் வெப்பம் அதிகரிக்கும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்து இருந்தது. சென்னையில் இரண்டாவது நாளாக நேற்றும் வெப்பம் சதம் அடித்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் 105 புள்ளி 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. குறிப்பாக தமிழக்த்தின் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு வெப்பம் கொளுத்தும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.