உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ.) சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்திய ஆயுத படையின் ஒரு பகுதியாக உள்ள பி.ஆர்.ஓ. அமைப்பினர் சாலை கட்டுமான பணியை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக பணிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் 57 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். பின்னர் அவர்கள், மனா பகுதியருகே உள்ள ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலருடைய நிலைமை மோசமடைந்து உள்ளது. மீதமுள்ள 47 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி கூறும்போது, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 3 முதல் 4 ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எனினும், கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 28-ந்தேதி (இன்று) பனிச்சரிவு ஏற்படும் என லஹால் மற்றும் ஸ்பிடி போலீசார் சார்பில் நேற்றே எச்சரிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.