Skip to content
Home » வைகை எக்ஸ்பிரசுக்கு இன்று வயது 46…. மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

வைகை எக்ஸ்பிரசுக்கு இன்று வயது 46…. மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Senthil

இந்தியா முழுவதும் இன்று 77-வது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 46-வது பிறந்த நாளும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ரெயில் என்ஜினுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து ரெயில் என்ஜினுக்கு வாழை மரம் தோரணம் கட்டி ரெயில் பெட்டிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்தும், கேக் வெட்டியும், ரெயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை-மதுரைக்கு இடையே பகல் நேர விரைவு ரெயிலாக உள்ள இந்த ரெயில் தென்மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ரெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரெயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரெயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரசுக்கு உண்டு.

வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது. நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறுமார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. நாள்தோறும் இந்த ரெயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 5 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ஒரு வழிப்பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. ஆகும். ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 46 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 77 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் அதனை இயக்கும் பைலட்டுகளுக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும்  கொண்டாடினர். பயணிகளுக்கும்  கேக் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!