சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளைச் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸார் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால்(35) என்பதும், பையில் எடுத்துவந்த பணம் மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து பணம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், கோபாலை ஆர்பிஎஃப் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்குப் பின் பணம் மற்றும் நகைகளுடன் கோபாலை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.