திருச்சியில் கடந்த 17.12.2019-ந்தேதி பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சங்கர் என்பவரின் வீட்டிற்கு அவரது மகனுடன் விளையாட சென்ற 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் (32) என்பவர் மீது பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி சங்கர் மீது கடந்த 11.03.2020-ந்தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று மேற்படி சங்கர் என்பவருக்கு போக்சோ ச/பி 5(1) ன்படி 20 வருட சிறைத்தண்டனையும், அபராதம் ரூ.5000/- ம் கட்டத்தவறினால் 3 மாத சிறைத்தண்டனையும் மற்றும் போக்சோ ச/பி 5(m) ன்படி 20 வருட சிறைத்தண்டனையும், அபராதம் ரூ.5000/- ம் கட்டத்தவறினால் 3 மாத சிறைத்தண்டனையும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் ஆஜராகி அரசு சார்பாக வழக்கு நடத்தி வாதாடினார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் சரஸ்வதி , புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்திய தற்போதைய பொன்மலை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கார்த்திகா மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெகுவாக பாரட்டினார்.