நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் ஷோபனா தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் லயா என்ற மகளும் இருந்தனர். இருவரும் கேர்கம்பை பகுதியில் உள்ள ஹில்போர்ட் என்ற தனியார் பள்ளியில் பயின்று வந்தனர்.
வழக்கம்போல் பள்ளி முடிந்து மாணவி லயா பள்ளி வேனில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். வேனை டிரைவர் தியாகராஜன் (28) என்பவர் இயக்கியுள்ளார்.
கூக்கல்தொரையில் மாணவியை இறக்கி விட்ட பின்னர் பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக தியாகராஜன் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது தியாகராஜன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜாக்கிரதையாக அவர் வாகனத்தை இயக்கியதில், முன்னால் நின்று கொண்டிருந்த சிறுமி லயா மீது வேன் மோதி அவர் முன் சக்கரத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி லயா, ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவர் தியாகராஜனை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.