நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்ரீபூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆணிக்கால் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் திறக்கப்பட்ட நிலையில், சுற்றியுள்ள உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். நேற்று மதியம் அப்பகுதியில் இருந்த ஓடையில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில், நேற்று மாலை வேளையில் அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரென காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்பொழுது ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க முயன்ற பொழுது சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகிய 4பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாயமான 4 பேரையும் தேடி வந்தனர். இரவு ஆகிவிட்டதாலும் ஆற்றில் ஓடும் நீரின் அளவு அதிகரித்ததாலும் மாயமான 4 பேரையும் தேடும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.