திருச்சி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புறத்தாக்குடி- கல்பாளையம் சாலையில் வாரி அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே உஷாரான போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் திருப்பூர் மாவட்டம் கோபால் காம்பவுண்ட் மாஸ்கோ நகரை சேர்ந்த விஜய் ( 28) திருப்பூர் அவிநாசி புத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார்( 31) முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை மீனவர் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(45) திருச்சி அண்ட குண்டான் தெரு பகுதியைச் சேர்ந்த நூர்தின்( 31) என்பது தெரியவந்தது.
இவர்கள் வசம் இருந்து 2 பெரிய இரும்பு ராடுகள், 30 அடி நீளமுள்ள கயிறு, 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது திருப்பூர் கோவை கரூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முகாமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இங்கு நடைமுறை இருந்த கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.