திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். வௌியூர் பக்தர்கள் தங்குவதற்காக கிரிவல பாதையில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. இந்நிலையில் கிரிவலப்பாதையில் சூரியலிங்கம் அருகே உள்ள ஒரு விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று அறை எடுத்து தங்கினர். இன்று காலை நீண்ட நேரமாக அவர்கள், அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள், அறையின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்கவில்லை.
சந்தேகமடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது 4 பேரும் மயங்கி கிடந்ததை கண்டனர். உடனே திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாலீசார் விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 2 ஆண், 2 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. சடலங்கள் அருகே சயனைடு பாட்டில் இருந்தது. இதனால் அவர்கள் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சடலமாக கிடந்தவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 48 வயது மதிக்கத்த தாய், அவரது 17 வயது மகன், 15 வயது மகள் மற்றும் அவர்களுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்தது.
இவர்கள் நேற்று ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துவிட்டு திருவண்ணாமலைக்கு வந்து தங்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த கடிதம் மற்றும் தற்கொலை குறித்து செல்போனில் பதிவு செய்த வீடிேயாவை போலீசார் கைப்பற்றினர். கடிதத்தில், தாங்கள் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்கள் என குறிப்பிட்டு இறைவனை தேடி செல்கிறோம் என தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.