அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமரசவல்லி கிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் கடந்த 04.10.2024 அன்று குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அரிகரன் 06.10.2024 அன்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்த பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு தங்க நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அரிகரன் 07.10.2024 அன்று தூத்தூர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 19.10.2024 அன்று தூத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனஞ்செயன் மற்றும் ஜெயங்கொண்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பழனிவேல் புலன் விசாரணை செய்ய சென்ற போது கா.மாத்தூர் மாரியம்மன் கோவில் முன்பாக சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை விசாரணை செய்தபோது, அவர்களின் பதில் முரணாக இருந்தது.இதனை அடுத்து அவர்களை தீர விசாரணை செய்ததில் காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் 24, த/பெ கோவிந்தசாமி,மேலத்தெரு என்றும், அவருடன் 16 வயதுக்குட்பட்ட சிறுவனும் சேர்ந்து தான் அரிகரன் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் தூத்தூர் போலீசார் கைது செய்து ,அவர்களிடமிருந்து ஆறரை பவுன் (6. 1/2 பவுன்)தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மணிகண்டன் அரியலூர் கிளை சிறைச்சாலையிலும், சிறுவன் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவெங்கனூர் பிரிவு சாலையில் திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி நின்று கொண்டிருந்தபோது காவல்துறை வாகனத்தை பார்த்து ஓட முயற்சித்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் (19) த/பெ தேவேந்திரன் மற்றும் மோகன்ராஜ் (22) த/பெ முருகேசன் ஆகியோர் என்று தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் திருமானூர் ஸ்ரீராம் நகரில் சாமிநாதன் என்பவர் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து தங்க நகைகளை திருடி சென்றதை ஒப்பு கொண்டனர். இது குறித்த வழக்கு சாமிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமானூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து எதிரிகள் இருவரையும் திருமானூர் போலீசார் கைது செய்து, 12 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரியலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மணிகண்டன்-க்கு சொந்தமான கோழி பண்ணையில் ஜெயபால், மோகன்ராஜ் மற்றும் சிறுவன் வேலை செய்ததாக தெரிகிறது. இதில் எதிரி மணிகண்டன் மற்றும் ஜெயபால் இருவரும் சேர்ந்து 2024 கடந்த மே மாதம் திருமானூரில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் என்பதும் தெரிகிறது. இது குறித்த வழக்கு திருமானூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.