புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பிலிப்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டியில் கால்பந்து போட்டியில் பங்கேற்க 15 பேர் வந்திருந்தனர். இவர்கள் காலையில் நடந்த போட்டியில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் அந்த கல்லூரியின் மறுகரையில் உள்ள கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை பார்க்க வந்தனர்.
அணை அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் சாமி கும்பிட்டு விட்டு குளிப்பதற்காக ஆற்றில் மாணவிகள் இறங்கி உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாணவியாக தண்ணீரில் இறங்கிய நிலையில் தண்ணீர் இழுத்துச் சென்றது. காப்பாற்ற முயற்ச்சித்த தமிழரசி, சோபிகா, இனியா,
லாவண்யா என நான்கு மாணவிகள் நீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு 4 மாணவிகளை சடலமாக மீட்டனர்.இதனால் மற்ற மாணவிகள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்ததும் கரூர் ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி சக மாணவிகளுக்கு ஆறுதல் கூறினர்.
உயிரிழந்த பள்ளி மனைவிகளின் சடலங்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி நான்கு பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.