தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சித்தா பிரிவு, அறுவைச்
சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த ஆய்வின் போது எவ்வித முன்அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்த 4 டாக்டர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு, இணை இயக்குநர் நலப் பணிகள் அவர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.