Skip to content
Home » வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று  வாக்குப்பதிவு நடந்தது.    பொதுவாக தமிழ்நாட்டில்  2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை 1 முதல் 3 சதவீத ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.  தமிழ்நாட்டில்  தருமபுரி தொகுதியில் தான் அதிக சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது 81.48%  வாக்குகள் இங்கு பதிவானது. அதே நேரத்தில் மத்திய சென்னையில் மிக குறைவாக 53.91% பதிவானது. சிதம்பரம்(தனி) 74.87%,  திருச்சி 67.45%,  தஞ்சை 69.82%,  தூத்துக்குடி 59.96%,  கள்ளக்குறிச்சி 79.25%,  ஓட்டுக்கள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள்,  ஏஜெண்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதிகாலை வரை ஓட்டுப்பதிவான  எந்திரங்கள்   ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

அவற்றை அங்குள்ள அதிகாரிகள் சரிபார்த்து உள்ளே   பூத் வாரியாக,  வரிசை எண்களின்படி  அடுக்கி வைத்தனர். இன்று காலையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள்(கலெக்டர்கள்) ,  ஓட்டுப்பதிவான எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சீல் வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த அறை மற்றும் வளாகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்த பாதுகாப்பில் மத்திய போலீஸ்,  துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு காமிராக்களும்  அங்கு பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன்  வேட்பாளர்களின் முகவர்கள்  தங்கி 24 மணி நேரமும் கண்காணிக்கவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான  தத்தனூர்  மீனாட்சி ராமசாமி  கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
பொது தேர்தல் பார்வையாளர் போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் , கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க, வேட்பாளர்களின் முகவர்களுக்கு, கல்லூரியில் தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு சிசிடி கேமராக்களின் பதிவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்க ப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள் மட்டும்  செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி தொகுதி ஓட்டுக்கள்  ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.  அங்கு இன்று காலை கலெக்டர்  பிரதீப் குமார். போலீஸ் கமிஷனர்  காமினி,  தேர்தல் பார்வையாளர்  முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோல  நாகை  தொகுதி ஒட்டுக்கள் அங்குள்ள பாரதிதாசன் கல்லூரியிலும், மயிலாடுதுறை தொகுதி ஓட்டுக்கள்  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியிலும்  பெரம்பலூர் ஓட்டுகள்  பெரம்பலூர் ஆதவ்  பள்ளியிலும்,  கரூர் ஓட்டுகள் குமாரசாமி கல்லூரியிலும், தஞ்சை ஓட்டுகள் குந்தவை நாச்சியார் கல்லூரியிலும் வைக்கப்பட்டு  சீல் வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  வருகிற 4ம் தேதி இந்த அறைகளின் சீல்கள் அகற்றப்பட்டு,  வாக்குகள் எண்ணப்படும். அதுவரை இந்த பாதுகாப்பு 24 மணி நேரமும் இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!