அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் “சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் புலன் விசாரணை செய்வது கடமை.
எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை.
கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோர முடியும். மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது. பொதுவாக அனைவரது இதயத்திலுமே 40 சதவீத அடைப்பு இருக்கும் என துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ( இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் காணொலி வாயிலாக வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:
கைதுக்கு பின்னர் வாக்குமூலம் பெற முடியாது. பி.எம்.எல்.ஏ. சட்டப்படிஅமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல. ஆதாரங்களை சேகரித்த பின்னரே புகார் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் கைது செய்ய முடியாது என துஷார் மேத்தா ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு உள்ளார். ஆனால் இங்கு முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறுகிறார்.
இவ்வாறு வாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு வாயில் லேசான வலி ஏற்படுகிறது( I have little pain) என்று கபில்சிபல் கூறினார்.
நீதிபதி கார்த்திகேயன்: இது பள்ளிக்கூடமோ, கல்லூரியோ அல்ல, சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 12. 15 மணிக்கு மீண்டும் விவாதிக்கலாம்.விவாதத்தின்போது நீங்கள் உங்கள் வசதியை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார்.
அதைத்தொடர்ந்து வாதம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் நீதிபதி அங்கேயே இருந்தார். பின்னர் 12. 15 மணிக்கு பிறகு வாதம் தொடர்ந்தது. அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரும், தனக்கு இருதய பிரச்னை இருப்பதாக கூறி விசாரணைக்கு ஆஜராக 4 வார காலம் அவகாசம் கேட்டு உள்ளார் என்றார்.
மதியம் 1.50 மணி அளவில் வாதம் நிறைவடைந்தது. எனவே 3வது நீதிபதி கார்த்திகேயன் இன்று மாலையே தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.