காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் ஸ்தலவிருட்சமாக மாமரம் உள்ளது. 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரம் கோவில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் உள்ளது. இந்த மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் காட்சியளிக்கிறார்.
அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ் காட்சி தந்து மணம் முடித்தார் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே தற்போதும் இங்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இந்த மாமரத்தின் 4 கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரம் என நம்பப்படுகிறது. இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தற்போது பூக்கள் பூத்து மாங்காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது.