Skip to content
Home » 34 ஜோடி திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்….

34 ஜோடி திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்….

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று காலை கோவில்கள் சார்பில் 34 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 34 இணைகளுக்கு நமது அனைவரின் வாழ்த்துக்களோடு இங்கே மணவிழா நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது. திருக்கோவில்கள் சார்பில் மிக சிறப்பாக இந்த திருமண நிகழ்ச்சியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தி இருக்கிறார். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிச் நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். குறிப்பாக, கல்வி-தொழில்-பொருளாதாரம்-சமூகம்-சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக்

கொண்டிருக்கிறது. எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக்கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருத்தியல் என்பது இதுதான். நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக்கொண்டு மிக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான்.

கோவில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதில் தலைவர் கலைஞர் எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலம் என்பது அனைத்துத் துறைகளிலும் பொற்காலமாக இருந்ததைப் போலவே, இந்து சமய அற நிலையத் துறையிலும் இன்றைக்கு ஒரு பொற் காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கழக ஆட்சி மலர்ந்த பிறகு, கோவில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. பழமையான கோவில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குட முழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டு உள்ளன. கோவில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோவில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழி முறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 கோவில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் கோவில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோவில்கள் மற்றும் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோவில்களின் எண்ணிக்கையை 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோவில்களுக்கு திருகுட முழுக்கு, 764 கோவில்களில் அன்னதானம், 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோவில்களில் மருத்துவ மையம், 15,000 கோவில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலமாக கோவில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இது தான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். மறைந்த பெரியவர்-தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ‘கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்’ என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோவில்கள் சார்பில் திருமண விழாக்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்தத் துறைக்கு இந்து சமயத் துறை என்று பெயரல்ல, இந்து சமய அறநிலையத் துறை என்று பெயர். அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் செஞ்சி மஸ்தான், மயிலை த.வேலு எம்.எல்.ஏ. மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *