Skip to content

தமிழக அரசியலில் பரபரப்பு…..முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கவர்னர் டில்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே நாளில் டெல்லி சென்றுள்ளனர்.  உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இவர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து, நாளை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.

 அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை தன்வசப்படுத்தியதோடு, அவசர செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அதேநேரம், அண்மையில் திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற மாநாடு  அதிமுகவில்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசியது இரு கட்சியினரிடையேயும்  பிரச்னையை  ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் டில்லியில் உள்ள பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நட்டா  ஆகியோரிடம் மட்டுமே நாங்கள் கூட்டணி பற்றி பேசுவோம்.  மேலே பாஸ் இருக்கும்போது, கீழே இருப்பவர்களிடம் நான் ஏன் பேச வேண்டும்? கூட்டணி குறித்து மாநில தலைவர்களிடம் எல்லாம் பேச முடியாது என  எடப்பாடி திட்டவட்டமாக பேசி வருகிறார்.

இத்தகைய சூழலில் இன்று டில்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை  இன்று இரவு 8 மணிக்கு சந்திக்க உள்ளார். அப்போது பாஜக உடனான கூட்டணி, அண்ணாமலை உடனான மோதல்,  குறித்து இருவரும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, அண்மையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அதோடு, ஆளுநரை சந்தித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக அண்ணாமலை புகார் அளித்து இருந்தார். இந்த சூழலில் தான் இன்று காலையிலேயே சென்னையில் இருந்து 3 நாள் பயணமாக ஆளுநர்  ரவி டில்லி சென்றார். இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில்  டில்லி செல்கிறார். அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள  பன்னோக்கு உயர் சிறப்பு  மருத்துவமனையை திறந்து வைக்க வரும்படி  ஜனாதிபதிக்கு முதல்வர் அழைப்பு விடுக்கிறார். டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு  நாளை மறுநாள் இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!