அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்துவுக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்க்கின்றார்களா? மருத்துவமே படிக்காமல் எவரேனும் பொது மக்களுக்கு மருத்துவம் செய்கிறார்களா? என்பது குறித்து சின்னவளையம் பெரியவளையம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் பாண்டியன், பெரியவளையம்கிராமத்தை சேர்ந்த சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர்கள் தங்களது வீடுகளில் போலி டாக்டர்களாக செயல்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சின்னவளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் பாண்டியன் மற்றும் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு மருந்து சப்ளை செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.