டில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தைக்கு 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு காணப்பட்டது. சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால், சிறுநீர்ப்பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு ‘லேப்ராஸ்கோபிக்’ ஆபரேஷன் மூலம் அடைப்பை நீக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். கடந்த டிசம்பர் மாதம், குழந்தைகள் மருத்துவ துறை தலைவர் டாக்டர் பாஜ்பாய் தலைமையில் டாக்டர்கள், மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்தனர். 2 மணி நேரத்தில் சிக்கலான இந்த ஆபரேஷன் முடிந்தது. அடுத்த 3 நாட்களில் குழந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டது. 4 மாதங்கள் கடந்த நிலையில், அந்த குழந்தைக்கு டாக்டர்கள் ‘ரெனோகிராம்’ சோதனை செய்தனர். அதில், அடைப்பு நீங்கி, சிறுநீர் தடையின்றி வருவது தெரிய வந்தது. எனவே, சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு ஆபரேஷன் நடத்த வேண்டி இருக்காது என்றும் அவர்கள் கூறினர். சிறுநீரக அடைப்புக்கு ‘லேப்ராஸ்கோபிக்’ ஆபரேஷன் செய்யப்பட்ட உலகிலேயே மிக இளவயது நோயாளி என்ற பெயரை அந்த குழந்தை பெறுவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.