உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி, செழியன் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தில் தான் இரு மொழிக்கொள்கையை முன்னாள் முதல்வர் அண்ணா சட்டமாக்கி, இன்று வரை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஏற்றுக்கொண்ட பாசிச வெறிப்பிடித்த பா.ஜ.க, 2025 புதிய வரைவு கொள்கை என்ற பெயரில், தொடக்க கல்வியிலும், உயர் கல்வியிலும் மும்மொழி கொள்கை பாடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிக்கிறார்கள்.
10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் , மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேம் என இந்தியாவில் துணிச்சலுடன் கூறிய முதல் வீர திருமகன் தமிழக முதல்வர் தான். எனவே, எந்த இடர்பாடுகள் வந்தாலும், இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மீண்டும், 1965 தமிழகத்திற்கு வரக் கூடாது . இந்த உஷ்ணத்தையும், எதிர்ப்பையும் உணர்ந்து மும்மொழி கொள்கை திணிப்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை மக்கள் போராட்டம், சட்டப் போராட்டமும் தமிழகத்தில் தொடரும்.
விஜயின் கல்விக்கொள்கை என்ன? கல்வியின் தொடர்பு என்ன? அவர் ஆரம்ப காலத்தில் இருந்து மொழிப் போர் போராட்டத்தில் கலந்துக்கொண்ட வரலாறு என்ன என்பது எல்லாம் மக்கள் நன்றாக அறிவார்கள். 2026 ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இன்னும் தெளிவாக தெரியும். நான் யாரையும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.