சென்னை, ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, ஆகிய 6 நகரங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்கு சேரும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி தரப்படுவதுடன் ஆகம விதிகள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும். 2022 -23ம் ஆண்டு அளிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சியில் 3 பெண்கள் உட்பட 94 போ் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு சென்னையில் இன்று நடந்த விழாவில் அறநிலையத்ததுறை அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.
ஸ்ரீரங்கம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேனி, ரம்யா ஆகியோரும் இன்று சான்று பெற்றனர். இவர்கள் அறநிலையத்துறை கோவில்களில் பயிற்சி பெறுவார்கள். பின்னர் கோவில்களில் காலி பணியிடம் ஏற்படும்போது அவர்கள் பணிகளில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பெண்களும் அர்ச்சகர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து பெருமிதத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.. எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து முதல்வர் கூறியிருப்பதாவது; ”பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…” எனத் தெரிவித்துள்ளார்.