ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சில வருடங்கள் இந்தியாவின் உச்சபட்ச விருதான பாரத ரத்னா அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர், பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தேர்தலை மனதில் கொண்டு இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் இன்றும் 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இன்று பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உணவு தட்டுப்பாடு நிலவி உணவுக்காக வெளிநாடுகளை எதிர்பார்த்திருந்த நிலையில் இந்தியாவில் நவீன தொழில் நுட்பம் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கி இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கினார். இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என்ற பெருமை பெற்றவர். இவர் தமிழ் நாட்டில் வேளாண் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர முன்னாள் பிரதமர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.வி. நரசிம்மராவ், முன்னாள் பிரதமர் சரண்சிங் ஆகியோருக்கும் இன்று பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இவர்களில் சரண்சிங் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர். மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியை (ஜனதா)அமைத்த மொரார்ஜி தேசாய் ஆட்சியில் துணை பிரதமராக இருந்தார். பின்னர் அந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு இவரே பிரதமர் ஆனார். அவரது ஆட்சியும் கவிழ்ந்தது.
பி.வி. நரசிம்மராவ், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். இந்திரா, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம் பெற்றவர். ஆந்திர முதல்வராக இருந்தவர். ராஜீவ் மறைந்ததும் நரசிம்மராவ் பிரதமர் பதவி ஏற்றார்.
இந்த ஆண்டு மட்டும் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்பு வரும் முன் வேறு யாருக்கும் அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் காமராஜர், எம்.ஜி.ஆர். , அப்துல் கலாம், எம்.எஸ். சுப்புலட்சுமி, சி சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா பெற்றுள்ளனர்.