திருச்சியில் ஜீயபுரம் அருகே ஏற்கெனவே கிடந்த அதே பகுதியில் மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் (சிவன்) கோயில் எதிரேயுள்ள காவிரி படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் நிகழ்விடம் சென்று அதை மீட்டு எடுத்துச் சென்றனர். பின்னர் அருகில் பாதுகாப்பாக மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களை வைத்து அதை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஏற்கெவே அக்டோபர் 30-ந் தேதி இதே இடத்தில் இதேபோலதொரு ராக்கெட் லாஞ்சர் கண்டு எடுக்கப்பட்டது. அதன் பின்னர், 1 ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் குழி தோண்டி, அங்கு பாதுகாப்பாக வெடித்து செயல் இழக்கச் செய்யப்பட்டது. இந்நிலையில் அதே இடத்தில் மீண்டும் 2 ஆவது ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டிருப்பது பலருக்கும் சந்தேகத்தையும். பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குறித்து காவல்துறையில் பல்வேறு முரணான தகவல்களை தெரிவித்திருந்தனர். முதலில் அது டம்மியானது எனவும் 70 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், கதவுகளை உடைக்க பயன்படுத்துவது இதனால் பாதிப்பு அதிகம் இருக்காது என பலவாறாக தெரிவித்தனர்.
பின்னர் ராணுவத்தினர் துப்பாக்கிகளில் பயன்படுத்தும் ராக்கெட் லாஞ்சர் வடிவிலான ஒரு வகையான ஆயுதம் (ஷெல் என்ற வெடிபொருள்) எனக்கூறி, அதை மிகவும் பாதுகாப்பாக குழிதோண்டி வெடித்து செயல் இழக்க வைத்தனர். பின்னர்தான் அது டம்பியல்ல வெடிக்கும் தன்மையுடையது என்பதும் ,அதில் டம்மி என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததால், அதை வைத்து டம்மி எனக் கூறியதும் தெரியவந்தது. இந்நிலையில் மற்றொரு ராக்கெட் லாஞ்சர் அதே இடத்தில் கண்டெடுத்திருப்பது குறித்து போலீசார் முறையான தகவல்கள் தெரிவிக்கவில்லை