தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். அப்போது ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கினார். இதற்காக வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர்(வைத்திலிங்கம் உறவினர்) பன்னீர்செல்வம், ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ், பாரத் கோல் கெமிக்கல் நிறுவனம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த செப்.19-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையே அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீடு, தஞ்சையில் உள்ள வைத்திலிங்கம் மகன் வீடு, ஒரத்தநாடு அருகே உள்ள வைத்திலிங்கம் மைத்துனா வீடு, சென்னையில் உள்ள் வைத்திலிங்கம் மகன்களின் அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டுக்கு நேற்று காலை 5 கார்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 11 பேர் தீவிர சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு வரை சோதனை நடந்தது.
சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அலுவலகத்திலும் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 2011-2016 காலக்கட்டத்தில் ஸ்ரீராம் குழுமத்துக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அனுமதிகள், ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 2ம் நாளாக தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடிகாடு உள்பட 5 இடங்களில் நடந்து வருகிறது.
நேற்றைய சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் சோதனை முடியும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று நடந்த சோதனையின்போது முன்னாள் அமைச்சர் திருச்சி வெல்லமண்டி நடராஜன் தலைமையில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வைத்திலிங்கம் எல்லோரையும் கலைந்து செல்லும்படி கூறினார்.
ஆனால் இன்றும் தொண்டர்கள் வைத்திலிங்கம் வீட்டு முன் திரண்டுள்ளனர்.