2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுவித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்து வருகிறார். நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, சி.பி.ஐ. சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீல் நியமிக்கப்படவுள்ளதால் செப்டம்பர் இறுதி வரை தள்ளி வைக்க வேண்டுமென சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, கோரிக்கையை நிராகரித்து அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டார். சி.பி.ஐ. விவாதங்களின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை வாதங்கள் இருக்கும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கக்கூடாது. எனவே இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு நிறுவனங்களின் மனுக்களை விசாரிக்க வேண்டும் என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ்குமார் சர்மா, முதலில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து ஆகஸ்டு 28-ந்தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.