வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர். இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.