ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ம் தேதி பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நிகழ்ந்தது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 291 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயில் விபத்தில் பயணித்த 28 பேரின் உடல்களை அடையாளம் காணப்படாத நிலையில், சடலங்கள் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னா்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், ரயில் விபத்து சம்பவம் நடைபெற்று 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை உறவினர்கள் யாரும் உயிரிழந்தவர்களைத் தேடி வராததால் இவர்களது உடல்களை அடக்கம் செய்ய புவனேசுவரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, 28 பேரின் உடல்களையும் மாநகராட்சியின் உதவி சுகாதார அலுவலரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்பின்னர் உடல்கள் அனைத்தும் இன்று தகனம் செய்யப்படுகிறது.