மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை சென்னை திருவான்மியூரில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு மருத்துவ தலைநகரமாக திகழ்ந்து வருகிறது.கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்பு தான் தமிழ்நாடு மருத்துவத்தில் முன்னேறியதற்கு காரணம். மக்களை புரிந்து கொள்ளும் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அவசியமான மருந்துகள், மிகவும் மலிவான விலையில் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கணும் என திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது. இதற்கு உங்களைப்போன்ற டாக்டர்களின் பங்களிப்பு முக்கியம். டாக்டர்கள் இல்லாமல் இதில் வெற்றி கிடைக்காது.,
நீங்கள் செய்வது சாதாரணமானது அல்ல. உயிர்காக்கும் சேவை. நீங்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடியை சகித்து இருப்பீர்கள். இந்த அரசும் எத்தனையோ நிதி நெருக்கடிகள் மத்தியில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களிடத்தில் மக்களின் உயிர்காக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். மக்கள் நலனை நீங்கள் கவனிக்கிறீர்கள். உங்கள் நலனை காக்க இந்த அரசு இருக்கிறது. மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது.
உங்களுக்கு தேவையான அவசியமானவற்றை செய்வேன். உங்கள் பணிசிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.