அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று (11-ம் தேதி) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது.
இந்த தினத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன. அதேநேரம், அட்சய திருதியை நாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி அளித்தது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது. நகை விற்பனை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது. விலை அதிகரித்தபோதும், விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடை உள்ள தங்க நகைகள் விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: அட்சய திருதியை தினத்தன்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்தது. விலை உயர்ந்தபோதும், தங்கம் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு அட்சய திருதி தினத்தன்று ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்கம் தமிழகம் முழுவதும் விற்பனை ஆகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு அதையும் கடந்த 24ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையானது.