கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின் பேரில் தங்க கட்டி வாங்கி சென்று தங்க நகை வடிவமைத்து தரும் பணி செய்து வந்தார். கோவையில் தங்கியிருந்த இவர் கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 கிராம் தங்க கட்டி வாங்கி சென்றார். ஒரு வாரத்தில்
கம்மல்கள் செய்து தருவதாக கூறி வாங்கி சென்ற தபஸ் சமந்தா மாயமானார். இவர் தங்க கட்டியுடன் சொந்த ஊர் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருந்த நிலையில் இவரை தேடி பிடிக்க முடியவில்லை. சுப்ரதா பாரிக் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மைசூரில் பதுங்கிய தபஸ் சமந்தாவை கைது செய்தனர். இவருக்கு உதவிய இவரது அக்கா கணவர் சாமல் சமந்தா என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான 182 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டது. மீதமுள்ள நகைகள் மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தங்க கட்டி வாங்கி சென்ற தபஸ் சமந்தா, சாமல் சமந்தாவுடன் சேர்ந்து தங்க கட்டியை உருக்கி ஆபரணம் தயாரித்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் மோசடி நகையை வைத்து பட்டறை அமைத்து தங்க நகை வியாபாரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.