நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிப் பெயரை அறிவித்தார். பின்பு அவரின் அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழகம் மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் காணொலி மூலம் 5 நிமிடங்கள் விஜய் உரையாடினார். விமர்சனங்களை இன்முகத்தோடு கடந்து செல்ல வேண்டும் என்றும், இனி வரும் காலத்தில் மக்கள் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் விஜயின் காணொலி உரையின் சாராம்சமாகும்.
இந்தக் கூட்டத்தினை புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்திருந்தார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் பேசியிருப்பதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
“உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் தான் கட்சியின் எதிர்காலம் இருக்கிறது. இதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என்பது வேறு. இதற்கடுத்து, நம் தலைவர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்யப் போகிறோம். தலைவர் என்கிற பதவி இனி யாருக்கும் இல்லை. 2026-ம் ஆண்டு முதலமைச்சராக தலைவரை நாம் அமர வைக்கவேண்டும். 2026 தான் நம் இலக்கு” என அவர் பேசியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.