2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுற்றுலாத்துறை பெரிய அளவில் பயனடைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே 2023 உலகக் கோப்பைதான் பொருளாதார தாக்கத்தில் பெரிய உலகக் கோப்பை என்கிறது நீல்சன்.
ஆனால், இந்த மிகப்பெரிய பொருளாதாரத் தாக்க மதிப்புதான் உண்மையான வருவாயா என்பது பற்றி ஐசிசி திட்டவட்டமாக எதையும் தெரிவிக்கவில்லை.
சாதனையான 1.25 மில்லியன் பார்வையாளர்கள் உலகக் கோப்பைப் போட்டிகளைக் கண்டு களித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் முதல் முறையாக ஐசிசி 50 ஓவர் போட்டியைப் பார்க்க வந்தவர்கள் என்கிறது ஐசிசி அறிக்கை.
விருந்தோம்பல் துறை மற்றும் பிற துறைகளில் சுமார் 48,000 முழு மற்றும் பகுதி நேர வேலைகள் ஐசிசி உலகக் கோப்பையினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அறிக்கை கூறுகின்றது.