சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், போட்டியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் என அனைத்தும் பாராட்டத்தக்கவையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் பிரதமர்மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு அடுத்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று நடப்பாண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் இளம் விளையாட்டு வீரர்களும், தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த இந்த விளையாட்டுகள் ஒரு தளமாக செயல்படும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையில் கம்பீரத்துடன் நடத்தப்படும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.