Skip to content

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம்

 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம்  அறிவித்திருந்தது.

ஆனால், 2,000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்படவில்லை என்றும், அவை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது.

மக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அளிக்கப்பட்டிருந்த கால அவகாசம்  முடிவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும், டெபாசிட் செய்யவும் அளிக்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளது-

அதன்படி அக்டோபர் 7-ம் தேதி வரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம்.

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக ரிசர்வ் வங்கி, தனது ‘Clean Note Policy’ என்னும் கொள்கையைச் சுட்டிக்காட்டியிருந்தது. இந்தக் கொள்கையின்படி, ரிசர்வ் வங்கி, தரமான ரூபாய்த் தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த முடிவு குறித்து, கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘கிட்டத்தட்ட 89% அளவான 2,000 ரூபாய் நோட்டுகள் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட்டவை,’ என்றும் ‘அவற்றின் ஆயுட்காலம் 4 முதல் 5 வருடங்கள்தான்,’ என்றும் கூறியிருந்தது.

மேலும், “2018ம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 6.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள், 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 3.62 லட்சம் கோடியாகக் குறைந்தன,” என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

பொதுவாக 2,000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!